அஸ்ஸலாமு அலைக்கும்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டார்கள்: ''முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி, அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றான்.'' (அறிவிப்பாளர்: மஃகில் பின் யஸார் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றிடக் கேட்டிருக்கிறேன்.
முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஓர் அதிகாரி, தனக்கு நலம் நாடுவதைப் போல் மற்ற முஸ்லிம்களுக்கு நலம் நாடவில்லையென்றால் தன் நலனுக்காக தன் உடலை வருத்தி உழைப்பது போலவே, மற்ற முஸ்லிம்களின் பணிகளை நிறைவேற்றுவதற்காக தன் உடலை அவர் வருத்தி உழைக்கவில்லை என்றால் அல்லாஹ் அவரை நரகில் தலைகுப்புற வீழ்த்தி விடுவான்!
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில், "தன்னையும் தன் வீட்டாரையும் பாதுகாப்பதைப் போல், அவர்களை (மக்களை) பாதுகாத்திடவில்லையென்றால்' என்னும் சொற்றொடரும் உள்ளது. (அறிவிப்பாளர்: மஃகில் பின் யஸார் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, கிதாபுல் கராஜ்)
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைப் படைத்தளபதியாக நியமித்து ஷாம் தேசத்துக்கு (சிரியாவுக்கு) அனுப்பியபோது, பின்வருமாறு அறிவுரை வழங்கினார்கள்: ""யஸீதே! உமக்குச் சில உறவினர்கள் உள்ளனர். பொறுப்புக்களை ஒப்படைப்பதில் அவர்களுக்கு நீர் முதலிடம் அளிக்க கூடும். இது உம்மைக் குறித்து நான் கொண்டுள்ள பெரியதோர் அச்சமாகும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: "முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர், ஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக நியமித்து விடுவாராயின், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும். மறுமைநாளில் அவன் தரப்பிலிருந்து எந்தவித மீட்புப்பணம் கொடுக்கப்பட்டாலும் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டான். இறுதியில் அவனை நரகத்தில் வீசியெறிவான்!'' (அறிவிப்பாளர்: யஸீத் பின் அபீஸுயான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கிதாபுல் கராஜ், இமாம் அபூ யூஸுஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி)
http://nidur.info