Saturday, May 14, 2011

மூஸா நபிக்கு அருளப்பட்ட முதல் வஹீ

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அபூ காலித் உமரி
மனித சமுதாயத்தில் தீமைகளும் அநீதியும் தலைவிரித்தாடுவதைக் கண்டு அறியாமையினால் விரக்தியுடன் சில பேர் இவ்வாறு சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்:
இந்த மனிதர்கள் ஏன் இவ்வளவு மோசமாகி விட்டார்கள்! நல்லோரைக் காண்பதே குதிரைக் கொம்பாகி விட்டதே!
பெரும் பெரும் தீமைகள் எல்லாம் இன்றைய மக்களின் பார்வையில் சர்வ சாதாரணமாகி விட்டனவே! இனி இறைவனே வந்தாலும் இவர்களைத் திருத்த முடியாது போலிருக்கிறதே.. ..!


உண்மையாதெனில், மனிதர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை இறைவனே ஏற்றிருக்கிறான்! உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உறைவிடம் போன்ற வாழ்க்கைச் சாதனங்களை எல்லாம் மனிதர்களுக்கு அவன் தானே வழங்கிக் கொண்டிருக்கிறான். அதுபோல இறைவழிகாட்டலையும் சீரான நெறியையும் மனிதர்கள் பெற்றிட அவனே தான் ஏற்பாடு செய்துள்ளான். அந்த வழிகாட்டலின்படி மக்களே வழிநடத்தினால் தீமைகளை எளிதில் கிள்ளி எறிந்திடலாம்.
திருக்குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது:
(உலகில்) கோணலான பல வழிகள் இருக்கும் நிலையில் நேரிய வழியைக் காண்பிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது (16:9)
ஆம்! இறைவன் மனிதர்களில் இருந்தே புனிதர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து நபிமார்களாக அனுப்புகிறான். அவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் தூதர்களாகப் பணியாற்றுகிறார்கள். இதுதான் இஸ்லாத்தின் தூதுத்துவக் கொள்கை! ஒவ்வொரு முஸ்லிமும் அடிப்படை நம்பிக்கையாக இதனை ஏற்றிட வேண்டும்.
இதோ! இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியாக முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் தூதுத்துவம் வழங்குகிறான். ஹீரா குகையில் தனிமையில் தங்கியிருக்கும் போது வானவர் ஜிப்ரீல் தோன்றி முதல் வஹியை நபியவர்களுக்கு அருளினார்.
அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள்:
ஜிப்ரீல் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக! என்றார். அதற்கு, நான் ஓதத் தெரிந்தவன் அல்லவே என்றேன். (இவ்வாறு மூன்று தடவை நடந்தது) மூன்றாவது தடவையில்,
ஓதுவீராக! படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு (ஓதுவீராக) அலக் (எனும் கரு) நிலையிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக! உம் இரட்சகன் மாபெரும் அருட்கொடையாளன்.
அவன் எப்படிப்பட்டவன் எனில், எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான் என்கிற வசனங்களை அந்த வானவர் ஓதினார். (நூல்: புகாரி)
இதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வஹீ. இது அவர்களின் 40 ஆவது வயதில் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் நடந்தது. அன்றிலிருந்து நபியவர்கள், இறுதித் தூதராக நியமிக்கப்பட்டு இறைமார்க்கத்தை இவ்வுலகில் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். இவ்வுலகத்தில் கோடானகோடி மக்களின் இதயங்களின் தூய்மையான இறைநம்பிக்கையை ஏற்றி வைத்து வாய்மையான பயபக்தியை பதியச் செய்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறது!
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட நபிப்பட்டத்தை – தூதுத்துவத்தை ஏற்க மறுத்த அன்றைய மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் -
யாருக்கும் தெரியாமல் எப்படி திடீரென முஹம்மதுக்கு நபிப்பட்டம் கிடைத்து விட்டது? என்று ஏளனம் பேசினார்கள். அதற்கு பதிலடியாகத்தான் – இதோ பாருங்கள்! மூஸா நபிக்கு வஹீ வந்ததே., அது பற்றி எல்லோருக்கும் பொது அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லையே! மறைமுகமாகத்தானே அருளப்பட்டது என்கிற ரீதியில் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. மூஸா நபிக்கு வஹீ வந்தது ஆச்சரியமான நிகழ்ச்சி! அதையே இங்கு சற்று விரிவாகப் பார்ப்போம்.
அன்றைய எகிப்தில் ஃபிர்அவ்ன் எனும் சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை தாண்டவமாடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் மூஸா நபி இறைத்தூதராக வருகை தருகிறார்கள்.
ஃபிர்அவ்ன் தனது ஆட்சிக்கு ஏதோ ஓர் ஆபத்து வரப்போகிறது என அஞ்சினான். ஜோசியம் பார்த்துக் கூறும் மந்திரவாதியின் சொல்லைக் கேட்டுக் கொண்டு பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை யெல்லாம் கொன்று குவித்தான். இத்தகைய கொடூரமான சூழ்நிலையில் தான் மூஸா நபி பிறக்கிறார்கள்.
நதியில் மிதந்து வந்த பேழை
அரசாங்கத்திற்கு தெரிந்தால் குழந்தையைக் கொன்று விடுவார்களே என அஞ்சி அன்று பிறந்த பச்சிளங் குழந்தையை ஒரு பேழையில் பக்குவமாக வைத்து மூடி நதியில் விடுகிறார் மூஸாவின் தாயார். நதியில் தவழ்ந்து தவழ்ந்து கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அரண்மனை வழியாக வந்தது அந்தப் பேழை. ஃபிர்அவ்னின் மனைவியே அதைக் கண்டெடுக்க . . . அரண்மனையிலேயே வளரும் நல்வாய்ப்பை மூஸா நபி பெறுகிறார்கள்.
பெரிய பிள்ளையாக வளர்ந்த போது, தமது தாய் – தந்தை யார்? தமது கோத்திரம் என்ன? குலம் என்ன? என்கிற விவரம் மூஸாவுக்குத் தெரிய வருகிறது. அடிக்கடி தமது தாயாரைச் சென்று பார்த்து வருவார்கள்.
இந்நிலையில் ஒருநாள், வீதியில் வந்து கொண்டிருந்த போது இரண்டு பேருக்கு மத்தயில் தகராறு. ஒருவன் மூஸா நபியின் இனத்தைச் சேர்ந்தவன். மற்றொருவன் ஃபிர்அவ்ன் இனத்தைச் சேர்ந்தவன். அதை விசாரித்து சண்டையைத் தீர்த்து வைப்பதற்காக . . . ஃபிர்அவ்னின் ஆளை லேசாக மூஸா நபி அடிக்கவே திடீரென அந்த மனிதன் இறந்து விடுகிறான். அது பற்றி மூன்றாமவர் யாருக்கும் தெரியாததால் விஷயம் அத்துடன் முடிந்து விடுகிறது.
ஆனால் மறுநாள் மூஸா நபியின் இனத்தைச் சேர்ந்தவன் வேறொரு நபருடன் தகராறு வளர்த்து கொண்டு முன்பு போல மூஸா நபியைக் கண்டதும் உதவிக்கு அழைத்தான். இப்போது மூஸா நபியவர்கள் தமது இனத்தானை நோக்கி, தினமும் தகராறு செய்வது தான் உனது வேலையா என்று அதற்றிய போது, நேற்று ஒருவனைக் கொன்றது போல் இன்று என்னையும் கொலை செய்யப் பார்க்கிறீரா என்று சப்தம் போடவே நேற்றைய இரகிசியம் வெளிப்பட்டு விட்டது.
விஷயம் ஃபிர்அவ்னுக்குத் தெரிந்து விட்டது. எனவே இங்கிருந்தால் நம்மை கைது செய்து பழி தீர்த்து விடுவான் எனப் பயந்த மூஸா நபியவர்கள், எகிப்தை விட்டே வெளியேறுகிறார்கள். மதாயின் என்ற நகர் சென்று அங்கு ஒரு பெரியவரிடம் தஞ்சம் அடைகிறார்கள். அவரிடம் ஆடு மேய்க்கும் பணியில் சுமார் 10 ஆண்டுகள் கழிகின்றன. பிறகு அந்தப் பெரியவரின் மூத்த மகளையே திருமணம் செய்கிறார்கள். அந்தப் பெரியவர் தான் ஷுஐப் நபி எனும் ஒரு கருத்து உள்ளது.
அதன் பிறகு தனது நாட்டையும் வீட்டையும் பார்க்க வேண்டும், தமது தாயாரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் மேலிடவே மூஸா நபியவர்கள் குடும்பத்தாருடன் எகிப்து நோக்கிப் பயணம் புறப்படுகிறார்கள்.
அப்போது தான் அந்த ஆச்சரியமான வினோதமான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒரு பச்சை மரம் அங்கே பற்றி எரிகிறது?
இரவு நேரம்! கடுமையான குளிர்! நடுநிசி வேளை! எகிப்து செல்லும் வழி எது என்பதும் தெரியவில்லை. எங்கேனும் பயணக் கூட்டத்தினர் தென்படுகிறார்களா என்று சுற்றிலும் பார்க்கிறார்கள் மூஸா நபியவர்கள்.
தூரத்தில் நெருப்பு எரிவது தெரிகிறது! அங்கு சென்று ஒரு கொள்ளியை எடுத்து வரலாம், அதன் மூலம் நெருப்பு மூட்டி குளிர் காயலாம் என்று மூஸா கருதுகிறார்கள். குறைந்த பட்சம் அங்கு எவரேனும் கிடைத்தால் எகிப்துக்கு செல்லும் பாதையைக் கேட்டு வர நாடுகிறார்கள். குடும்பத்தார்களை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு இருட்டில் கைத்தடியால் தட்டித்தட்டி மெதுவாக நடந்து அந்த நெருப்பருகே செல்கிறார்கள். சினாய் மலையின் இடது பக்கமாக துவா என்ற ஓடைக்கு வந்ததும் . . .
காற்றின் வேகமோ மழை மேகமோ எதுவும் இல்லை. எங்கும் ஒரே நிசப்தம்! ஒரு வினோதமான சூழ்நிலை நிலவியது! அருகே ஒரு பச்சைப் பசுமையான மரம்! அதிலிருந்து தான் ஒளிப்பரவாகம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அதுதான் எரியும் நெருப்பு போல் தெரிந்தது! ஆனால் அது . . . நெருப்பு அல்ல! ஆகா! என்ன ஆச்சரியம்! அதிசயம்! அந்த மரத்தின் இலைகளிலோ கிளைகளிலோ தீ பற்றவில்லை. அவை கரியக்கூட இல்லை. மாறாக அவற்றின் பசுமை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்க அவற்றிலிருந்து அதிகப் பிரகாசம் தான் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது!!
எங்கும் ஒரே ஒளிமயம்! மூஸாவுக்கு ஒன்றும் புலப்பட வில்லை. ஒருவிதமான அச்சம் அவர்களை ஆட்கொள்கிறது! திடீரென ஓர் அசரீரி வந்தது. அந்த வினோதமான குரலை கூர்ந்து கவனிக்கிறார்கள்:
மூஸாவே! நான்தான் உமது இறைவன். உமது காலணிகளைக் கழற்றி விடும். திண்ணமாக நீர் துவா எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
மேலும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே உமக்கு அருளப்படும் வஹியை செவிமடுப்பீராக! திண்ணமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறுயாரையும் வணக்கத்திற்குரியவனாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எனக்கு அடிபணிவீராக. என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக.
நிச்சயமாக மறுமை நாள் வந்தே தீரும்., அது எப்போது வரும் என்பதை மறைத்து வைக்கவே நான் விரும்புகிறேன். (மறுமை வருவது) எதற்காகவெனில் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் முயன்று தேடிக் கொண்டிருக்கும் செயல்களுக்குக் கூலி வழங்குவதற்காகத் தான்! எனவே எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகிறானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையில் இருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து போய் விடுவீர் (20:12-16)
கல் மனதை உருகச் செய்த குர்ஆன்

இதுதான் மூஸா நபிக்கு அருளப்பட்ட முதல் வஹீ. ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை என்கின்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளில் அமையப் பெற்ற இறைவழிகாட்டுதல்.
திருக்குர்ஆனில் தாஹா அத்தியாயத்தின் (20) தொடக்கத்தில் இந்த வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதற்கு முதலில் இறைவனின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் சில வசனங்கள்! அவற்றில், இறைவன் எப்படிப்பட்ட வல்லமை உடையவன், அவனது அறிவு ஞானத்தின் ஆழமும் அகலமும் எத்தகைய வீச்சு கொண்டது என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வசனங்களை மனம் ஒன்றி – கருத்தூன்றிப் படித்தால் கரையாத கல் மனமும் கரைந்து விடும்! அந்த அளவு சிந்தனையைத் தூண்டி உள்ளத்தைக் கவர்ந்து இழுக்கும் வகையில் இலக்கிய நயத்துடன் அடுக்கு மொழியில் அவை அமைந்துள்ளன.
இதோ! இஸ்லாத்தின் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தில் இறை நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்தது இந்த தாஹா அத்தியாயத்தின் வசனங்கள் தான். எத்தகைய உமர்? ஆரம்பத்தில் அவர், இஸ்லாத்தை வெறுத்தார் என்பது மட்டுமல்லாமல் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார். சாமானிய முஸ்லிம்களை இஸ்லாத்தை ஏற்றதற்காக அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்தார்.
அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் முஹம்மதின் தலையைக் கொய்து வரப்போகிறேன் என்று சபதம் செய்து கொண்டு நபியவர்களின் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டார். வழியில் அவருடைய சகோதரி இஸ்லாத்தில் இணைந்த விபரம் தெரியவரவே அவரது வீடு நோக்கித் திரும்பினார். அங்கே . . . திருக்குர்ஆனின் இதே வசனங்களைச் செவியேற்கவும் ஓதி உணர்வதற்கான நல்ல வாய்ப்பு உமர் அவர்களுக்குக் கிடைத்தது. என்னே ஆச்சரியம்! உடனேயே அந்த இறைவனின் வல்லமைக்கு முன்னால் கீழ்படிந்து விடுகிறார்கள்!
ஆம்! இந்த தாஹா அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள் தான் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தை வென்றெடுத்தது. சரியாகச் சொல்வதானால், இந்த இறைவசனங்கள் உமர் அவர்களைத் தலைகீழாக மாற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்! ஆம்! இறைவழிகாட்டலை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பிறகு முழு ஈடுபாட்டுடன் இஸ்லாத்தை – இறையருள் மார்க்கத்தை இந்தப் பாரெங்கும் பரவச் செய்கிறார்கள் உமர் (ரலி) அவர்கள்!
இங்கு . . . முதல் வஹீ அருளப்பட்ட பிறகு மூஸா நபிக்கு இறைவன் இட்ட கட்டளையும் இது போன்றதே. மூஸாவே! ஃபிர்அவ்னிடம் சென்று இறைவழிகாட்;டலை ஏற்றுக் கொள்ளுமாறு அழையுங்கள். ஆக்கவும் அழிக்கவுமான எல்லா வல்லமையும் கொண்ட இறைவனின் பேரதிகாரத்தின் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுங்கள். அந்த சர்வாதிகாரி நன்கு சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து தனது ஆணவத்தையும் அடக்கு முறையையும் கைவிடலாம். குறைந்த பட்சம் இறைவனைக் குறித்து அச்சம் கொள்ளலாம். அதன் பிறகாவது அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் – கொடுமை செய்யும் கொடிய செயலில் இருந்து அவன் விலகலாம் என்பதற்காக அவனிடம் செல்லுமாறு மூஸா நபியை இறைவன் பணிக்கிறான்.
இந்த வரலாற்று நிகழ்ச்சிகள் தரும் பாடம் இதுதான்:
இறைவழிகாட்டலை முறையாக எடுத்துரைத்து மக்களை சீர்திருத்தம் செய்தால் வெற்றி நிச்சயம்! உமர் (ரலி) அவர்களைப் போன்று மனம் திருந்தும் நன் மக்கள் கிடைக்கலாம். பிறகு இறைவழிகாட்டலை ஏற்று இப்பாரெங்கும் அதன் ஒளிச்சுடரை ஏந்திச் சென்று வழிகாட்டவும் செய்யலாம். மக்கள் அனைவரும் ஃபிர்அவ்னைப் போன்று பிடிவாதக்காரர்கள் – கொடுமையாளர்கள் அல்லர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்க விஷயமாகும்.
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!