Wednesday, March 28, 2012

நபிகள் நாயகம் VS தலைவர்கள்(பகுதி-2)

முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆணையும்,நபி மொழிகளையும் மறுப்பதற்கு காரணமே,நபி (ஸல்) அவர்களின் நல் ஒழுக்கமான வாழ்கையை திட்டமிட்டே சில விசமிகல் மறைப்பதே.அவர்கள் அதை உண்மையென்று நம்புகின்ற மக்களை வழிகேட்டுக்கு அழைத்து செல்கின்றனர்.இந்த கட்டுரையின் மூலமாக நாம் எதிர்பார்பதெல்லாம் நபி(ஸல்) அவர்களைப் பற்றிய தவறான இச்சிந்தனையை
அடியோடு நாம் களையவேண்டும் என்பதே,


மேலும் நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்கையை அறிந்துகொண்டால் தான் குர்ஆணை இறை வேதம் என்று மாற்று மதத்தார்கள் எற்றுகொள்வார்கள். அண்டை வீட்டாரின் நலன் நாடுபவர்,கண்ணியாமான,ஒழுக்கமான வாழ்க்கைக்கு சொந்தகாரர்,பொய் உறைக்காதவர் என்றெல்லாம் சிறப்பு பட்டத்திற்குரிய ஒருவர் எப்படி தன்னை இறைவனுடைய தூதர் பொய் சொல்லி இருப்பார்,நிச்சயம் உண்மையை தான் சொல்லியிருப்பார்.தன்னை தூதர் என்று சொல்லிகொண்டதால் அவர்கள் அடைந்த லாபம் தான் என்ன?உண்மையை சொல்வதென்றால் அவர்களுடைய பொருளாதார நிலை தூது துவதிர்க்கு முன்பைவிட பின்பே மிகவும் மோசம்,அந்த வாழ்கை நிலையை பற்றிய விரிவாக்கமே இக்கட்டுரையின் தொடர்ச்சி, சென்ற தொடரி நீங்கள் விரும்பி படித்து ஆர்வம் தந்தது போல இக்கட்டுரைக்கும் உங்களுடைய ஆதரவையும்,உங்களுடைய கருத்துகளையும் தாருங்கள்.இனி சென்ற கட்டுரையின் தொடர்ச்சிக்கு செல்வோம். 

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை:
ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள்

ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரண மாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும், நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.
யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.
இதனால், நபிகள் நாயகத்தின் நடை, உடை, பாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?

தலைமைக்கு ஆசைப்படுபவரும், இது போன்ற பதவிகளையும், அதிகாரத்தையும் அடைந்தவரும் எவ்வாறு நடந்து கொள்வார்களோ, அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடக்கவில்லை. பதவியையும், அதிகாரத்தையும் பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்களோ அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவும் இல்லை.
சொத்தும் சேர்க்கவில்லை சொகுசாகவும் வாழவில்லை:
இவ்வளவு மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா? தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களா? சொத்துக்களை வாங்கிக் குவித்தார்களா? அறுசுவை உண்டிகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா? இதை முதல் நாம் ஆராய்வோம்.ஏனெனில் அரசியலோ, ஆன்மீகத்திலோ தலைமைத்துவத்தைப் பெற்றவர்கள் அந்தத் தலைமையைப் பயன்படுத்தி இப்படித் தான் நடந்து கொள்கின்றனர்.
ஒரு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றவர் சில மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்து விட்டு பதவி இழந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்பதவியைப் பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாரோ, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தனவோ அதே அளவு தான் இப்போதும் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவர் பதவி வகித்த சில மாதங்களிலேயே பல மடங்கு சொத்துக்களைக் குவித்திருப்பார்.
இவ்வாறு சொத்துக்கள் குவிப்பதற்கு பிரதமர் பதவி கூடத் தேவையில்லை. பிரதமரை விட அதிகாரம் குறைந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட சொகுசான வாழ்க்கை வாழ்ந்து, தமது பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களைக் குவித்துக் கொள்வதை நாம் காண்கிறோம்.
இதை விடக் குறைந்த அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் கூட அதிகாரத்தைத் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம்.
இவர்கள் இப்பதவிகளைப் பெறுவதற்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ, அதை விடப் பல்லாயிரம் மடங்கு வசதிகள் உடையவர்களாக மாறி விடுகிறார்கள்.
இதை ஒப்புக்கொள்வதற்கு வரலாற்று அறிவோ, ஆதாரமோ தேவையில்லை. நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவரும் இதற்கு நிதர்சனமான உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
எந்த ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் 'நான் ஊழல் செய்யவில்லை' என்று அவர் மறுத்ததில்லை. 'நீ ஊழல் செய்யவில்லையா?' என்று குற்றம் சாட்டியவரையே திருப்பிக் கேட்பது தான் அவரது பதிலாகவுள்ளது.
கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளும், தண்டிப்பதற்குச் சட்டமும், நீதிமன்றங்களும், அம்பலப்படுத்திட செய்தி ஊடகங்களும் உள்ள இந்தக் காலத்திலேயே இப்படியென்றால், இத்தகைய இடையூறுகள் இல்லாத காலத்தில் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்?

இதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவர்கள் களியாட்டம் போட்ட அரண்மனைகளும், கோட்டை கொத்தளங்களும், அந்தப்புரங்களும், ஆடம்பரப் பொருட்களும் இன்றளவும் இதற்குச் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.
அமரும் ஆசனத்தைக் கூட தங்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், காதக்காக மக்கள் வரிப் பணத்தில் காதல் மாளிகை எழுப்பியவர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கேள்வி கேட்பாரற்ற காலத்தில் தான் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்தனர். அவர்களைச் சுற்றிலும் கைசர், கிஸ்ரா, ஹெர்குஸ் போன்ற பெரிய மன்னர்களும், சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தார்கள். அவர்களைப் போல் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்திருந்தால் யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்!
தலைமைப் பதவியைப் பெற்ற ஒருவர்
* வகை வகையாக உண்டு, உடுத்தியிருக்கிறாரா?
* பல வகையான பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா?
* ஆடம்பரப் பொருட்களைக் குவித்திருக்கிறாரா?
* அண்ணாந்து பார்க்கும் மாளிகைகளைக் கட்டினாரா?
* ஊரை வளைத்துப் போட்டாரா?
* தனது வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்துச் சென்றிருக்கிறாரா?
என்ற கேள்விகளுக்கு இல்லை என்று விடை அளிக்க முடிந்தால் தான் 'அவர் பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை' என்று கூற முடியும். மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் நபிகள் நாயகத்தைப் பொருத்தவரை 'இல்லை' என்று தான் வரலாறு விடை கூறுகிறது.
உண்டு சுகிக்கவில்லை
மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.
'மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை' என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
'எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) 'பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்' என விடையளித்தார்.
அறிவிப்பவர் : உர்வா
நூல் : புகாரி 2567, 6459
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) இடம் கேட்டேன். அதற்கு அவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை' என்றார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?' என்று கேட்டேன். அதற்கவர் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை' என்றார். 'தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கவர் 'தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம்' என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : அபூ ஹாஸிம்
நூல் : புகாரி 5413
'நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 5374
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை' என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 5416, 6454
'ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு 'குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே' என விளக்கமளித்தார்.
நூல் : புகாரி 5423
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி 'சாப்பிடுங்கள்' என்று அனஸ் (ரலி) கூறி விட்டு 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை' எனக் கூறினார்.
அறிவிப்பவர் : கதாதா
நூல் : புகாரி 5385, 5421, 6457
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) 'எனது வீட்டிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 2069, 2508
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு சுலைம் (ரலி) இடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர் 'என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார்' என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்
(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : முஸ்லிம் 3802
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன்' என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார்.
நூல் : புகாரி 5414
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம் 'குழம்பு ஏதும் உள்ளதா?' எனக் கேட்டனர். 'வினிகரைத் தவிர வேறு ஏதும் எங்களிடம் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். 'வினிகர் சிறந்த குழம்பாக இருக்கிறதே' என இரு முறை கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 3824
நான் எனது வீட்டின் நிழல் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன். 'அருகே வா' என்று அவர்கள் அழைத்ததும் அருகில் சென்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். தமது வீட்டுக்குச் சென்றவுடன் 'காலை உணவு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் 'இருக்கிறது' என்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'குழம்பு ஏதும் உள்ளதா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லை' என்று குடும்பத்தினர் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர். எனக்கும், அவர்களுக்கும் தலா ஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள். மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டு இன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : முஸ்லிம் 3826
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்; எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கான உணவைத் தயார் செய்வீராக!' என்று அபூ ஷுஐப் (ரலி) தமது ஊழியரிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாத) இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். 'இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டார். இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராக! இல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்!' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ ஷுஐப் (ரலி) 'இவருக்கும் அனுமதி அளிக்கிறேன்' என்றார்.
நூல் : புகாரி 2081, 2456, 5434, 5461
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டனர். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அவ்விருவரும் பசி' என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன்' என்றார்கள்... ஹதீஸ் சுருக்கம்.
நூல் : முஸ்லிம் 3799
இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும்.ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.
செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்)
* அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?
* குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?
* காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?
* அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?
* ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையை உலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?
* முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலையை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?
* காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?
* பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை எளிமையாக இருந்துள்ளது எப்படி?
இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை; செல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.
இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்? எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரே? வேறு வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றனரே! அது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுக போகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை.


உடுத்தி மகிழவில்லை
அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.
மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார்.
நூல் : புகாரி 3108, 5818
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1277, 2093, 5810
போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 390, 807, 3654
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.
நூல் : புகாரி 1031, 3565
மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் 'இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது' என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்' எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி 'இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.
மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.என்ன மாதிரியான சுகபோகனகளை நபி(ஸல்)அவர்கள் அனுபவித்தார்கள் தெரியும்.....தொடரும் இன்ஷா அல்லாஹ்
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!