Thursday, January 9, 2014

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பித்த ஜனாஸாக்கள்

 بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் குடும்பத்தார்களும் இந்த தீனுல் இஸ்லாத்திற்காக எவ்வளவு துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை என்றைக்கேனும் நாம் எண்ணிப்பார்க்கின்றோமா? பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் என்று சொல்லும்போது நம் அனைவருக்கும் அவர்களின் அன்பு மகளார் ஃபாத்திம(த்)துஜ்ஜொஹ்ரா
ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறார்கள். ஏனெனில் நாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களின்
வரலாறுகளைப்பற்றியோ ஸஹாபாக்களின் வரலாறுகளைப் பற்றியோ தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டாதவர்களாகவே இருந்து வருகிறோம்.


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரு ஸஹாபாக்களின் மெய் சிலிர்க்கும் வரலாறு ஒருபக்கமிருக்கட்டும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மகளார் ஹளரத் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எதிரிகளால் தாக்கப்பட்டு கீழே விழுந்ததனால் வயிற்றிலுள்ள குழந்தை இறந்துவிட்டதையும், அதன் பாதிப்பு அவர்களின் உடல்நலக்குறைவுக்கு காரணமாகி அவர்கள் மரணத்திற்கும் காரணமாகிய சம்பவம் நம்மில் எத்தனைப் பெண்களுக்குத்தெரியும்? இந்த தியாக வரலாறு இன்றைய இளம் தலைமுறையைச் சார்ந்த பெண்களுக்கு போய்ச் சேர்ந்திருக்குமானால் அவர்கள் வழிதவறிப்போவார்களா?
சகோதரர்களே, சகோதரிகளே! பெரியவர்கள் மட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறையினர் ஆண்-பெண் அனைவருக்கும் கட்டாயமாக இந்த தியாக வரலாறுகள் போய்ச்சேர வேண்டும். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த வரலாறுகள் அவர்களை நேர்வழிப்படுத்தும்.]
ஸஹாபா பெருமக்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பையும் நேசத்தையும் பெற்று சிறந்து விளங்கியவர்கள். தங்களின் இன்னுயிரை துச்சமாக மதித்து ஜிஹாதில் கலந்துகொண்டு ஷஹீதானவர்களும், இவ்வுலக வாழ்க்கையைவிட மறுவுலக வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்தவர்களும், கொடுமைகளையும் வறுமையையும் இன்முகத்துடன் சகித்து, இறுதிவரை ஈமானை இழக்காமல், வாழ்ந்த புனிதர்களும் அவர்களே.
இப்படிப்பட்ட உத்தமர்களின் ஜனாஸாத் தொழுகைகளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடல்லாமல், பிரத்தியேகமான முறையில் நல்லடக்கமும் செய்துள்ளார்கள் என்பது வரலாறு. அவைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.
 ஹளரத் அப்துல்லாஹ் துல்பஜாதீன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் :
இவர்களின் ஆரம்பப் பெயர் அப்துல் உஸ்ஸா என்பதாகும். இளமைப்பருவத்திலேயே தந்தையை இழந்து, சிறிய தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் பொருள்களும், சொத்துக்கள் முழுவதும் சிறிய தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தன.
இளைஞராக இருந்த ஹளரத் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் செவிகளில் இஸ்லாத்தின் இனிய நாதம் ஒலித்தது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காண உள்ளம் துடித்தாலும் கொடுங்கோலனான சிறிய தந்தையின் அச்சத்தால், அமைதியாக இருந்தார். எவ்வளவு நாட்கள்தான் ஆவலை கட்டுப்படுத்தமுடியும்? துணிந்து ஒருநாள் தன் சிறிய தந்தையிடம் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்துவிட்டு வருகிறேன்" என்று அனுமதி கேட்டார். கடுங்கோபமடைந்த சிறிய தந்தை அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நையப்புடைத்தார். அத்துடன் விட்டாரா என்றால், அதுதான் இல்லை! ஹளரத் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் பிடுங்கிக்கொண்டு, அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.
அந்த அந்த நிர்வாணக்கோலத்துடன் ஹளரத் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நேராக தன்னுடைய தாயாரை சந்தித்தார். மகனின் கோலத்தைக் கண்டு பதறிப்போன தாயார் ஒரு கம்பளியை மகனிடம் கொடுத்தார். அதை இரண்டு துண்டுகளாக்கி ஒன்றை இடுப்பில் கட்டிக்கொண்டும் மற்றதை உடலில் போர்த்திக்கொண்டும் இதே நிலையில் மதீனா மாநகரம் வந்தடைந்தார். இஸ்லாத்தில் இணைந்து ஷஹீதாக வேண்டும் எனும் தன்னுடைய விருப்பத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார். அன்றிலிருந்து அவருடைய பெயர் அப்துல்லாஹ் பஜாதீன் (இரண்டு துண்டு கம்பளி உடையவர்) என்று வழங்கலாயிற்று.
அதன்பிறகு திண்ணைத்தோழர்கள் குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்டு மார்க்கக்கல்வி கற்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இளம் வயதுடையவராக இருந்ததால் குர்ஆனை சப்தமிட்டு ஓதும் பழக்கமுடையவராக இருந்தார். ஒருநாள் இதை செயியுற்ற ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அப்துல்லாஹ்வுடைய சப்தத்தினால், தொழுபவர்களின் தொழுகையில் குழப்பம் ஏற்படுகிறது" என்று முறையிட்டார்கள். இதைக்கேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அவரைத் தடுக்காதீர்கள்; அவர் தனக்கென்று இருந்த அனைத்தையும் இறைவழியில் தியாகம் செய்துவிட்டு வந்துள்ளார்" என்று சமாதானம் கூறி முறையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
இந்த சமயத்தில்தான் தபூக் யுத்தத்திற்கு படை ஒன்று புறப்பட்டுச் சென்றது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்; ''என் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம், எனக்கு ஷஹீதாகும் பாக்கியம் கிட்ட வேண்டும் என்று துஆச் செய்யுங்கள்" என்று வேண்டி நின்றார். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவேளை உமக்கு போருக்கு செல்லும் வழியிலேயே மரணம் சம்பவித்தாலும் நீர் ஷஹீதுகளின் புனிதப் பட்டியலில் சேர்ந்து விடுவீர்" என்று பதிலளித்தார்கள்.
இதன் பிறகு இஸ்லாமியப் படை புறப்பட்டுச் சென்றது. இறைவனின் நாட்டம் வழியிலேயே அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடுமையான ஜுரம் கண்டு, அதன் விளைவாக அவர் இறந்துவிட்டார். அவருடைய உயிர் பிரியும் நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமாட்டில் இருந்தார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித முகத்தை பார்த்தவண்ணம் அவர்களின் உயிர் உடலை விட்டு விடை பெற்றது.
"ஹளரத் அப்துல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜனாஸா அடக்கம் செய்வதற்காக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய புனித போர்வையை அளித்தார்கள்" என்று சில ரிவாயத்துகளில் வந்துள்ளது. அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாதையில் அடியெடுத்து வைக்க நிர்வாணமாக வீட்டைவிட்டுப் புறப்படுவதற்கும் தயங்காததே இந்த சிறப்புக்குக் காரணமாகும்.
இதுமட்டுமல்ல, அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஜனாஸா அடக்கமும் வினோதமான முறையில் சிறப்பாக அமைந்தது. ஆம்! புகழ்மிக்க நபித்தோழர்கள் கபர்குழி தோண்டினர். புதைகுழி தயாரானதும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே குழியில் இறங்கி சிறிது நேரம் அதில் படுத்துக் கொண்டார்கள்! பிறகு எழுந்து, "நம் சகோதரரை கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். உடனே, ஹளரத் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அந்த புனித உடலை தாங்கியபடியே எடுத்து கபரில் இறக்கினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அப்துல்லாஹ் மற்றவர்களைப் போன்றவர் அல்ல. தகுந்த மரியாதையுடன் மெதுவாக இறக்கவும்" என்று தெரிவித்தார்கள். இப்படிப்பட்ட உயர்வான சிறப்பும் பாக்கியமும் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.
 ஹளரத் வஹப்பின் காபூஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் :
இவர்கள் இஸ்லாத்தைத் தழுவி தன்னுடைய ஊரிலேயே வாழ்ந்து வந்தார்கள். ஆடு மேய்ப்பதுதான் அவரது தொழில். ஒருமுறை அவ்ர் தன் சகோதரரின் மகனுடன் மதீனா முனவ்வராவுக்கு வந்தார். தன்னுடன் சில ஆடுகளையும் கொண்டு வந்திருந்தார்.
அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவை விட்டு ''உஹத்'' யுத்தத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்கள். இதை அறிந்த ஹளரத் வஹப்பின் காபூஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆடுகளை அங்கேயே விட்டுவிட்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். இதற்குள், எதிரிகளின் ஒரு அணியினர், திடீரென்று தாக்குதல் நடத்தத்தொடங்கினர்.
இதனைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இந்த பகைவர்களை, யார் எதிர்கொள்கிறாரோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார்" என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன் ஹளரத் வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவேசமாக வாளை சுழற்றியபடி எதிரிகளைத் துரத்தியடித்தார்கள். இரண்டாவது முறையும், மூன்றாவ்து முறையும் இதுபோன்றே துரத்தியடித்தார்கள். அவருடைய துணிச்சலைக் கண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் ஹளரத் வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை "சுவனவாசி" என சுபச் செய்தி அறிவித்தார்கள். இந்த அறிவிப்பினை கேட்டதுதான் தாமதம் ஹளரத் வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீண்டும் வாளை உருவிக்கொண்டு வீராவேசத்துடன் எதிரிகளின் கூட்டத்தில் புலியெனப் புகுந்து பாய்ந்தார்கள். மூர்க்கமாகப் போரிட்டு இறுதியில் ஷஹீதானார்கள்.
வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்ற துணிவும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஆண்மகனை, எந்த ஒரு போரிலும் நான் கண்டதில்லை! அவர் ஷஹீதான பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளரத் வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமாட்டில் நின்றபடியே, அல்லாஹ் உம்மை பொருந்திக் கொண்டான்; நானும் உம்மை மனப்பூர்வமாக பொருந்திக் கொண்டேன்" என்று கூறியதாக, ஹளரத் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த போரில், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காயமடைந்திருந்த போதிலும், தன் கரங்களினால் ஹளரத் வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை அடக்கம் செய்தார்கள்.
ஹளரத் வஹப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சேவைகள், செயல்களைப்போல் வேறு யாருடையதும் சிறந்து விளங்கவில்லை. அவருடைய "அஃமல் நாமா" வைப் போன்று அல்லாஹ்வின் சமூகத்தில் நானும் கொண்டு செல்ல வேண்டுமென்று என் மனம் விரும்புகிறது" என்று ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூத்த மகளார்
 ஹளரத் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் :
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூத்த மகளார் ஹளரத் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நுபுவ்வத்திற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள். அவர்களுடைய சித்தி மகனார் அபுல் ஆஸ் பின் ரபீ அவர்களை மணந்துகொண்டார்கள். ஹிஜ்ரத் நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதினமா நகரத்திற்கு அவர்களால் செல்ல முடியவில்லை. "பத்ர்" போர் முடிந்த பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட இரு நபர்களுடன் மதீனா நகருக்குப் புறப்பட்டார்கள். இதை அறிந்த எதிரிகள், பின் தொடர்ந்து வந்து, ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை வேல் கொண்டு தாக்கினர். அதனால் அவர்கள், படுகாயமடைந்து ஒட்டகத்தின் மீதிருந்து கீழே விழ்ந்துவிட்டார்கள். கர்ப்பிணியான அவர்களின் வயிற்றில் அடிபட்டு குழந்தையும் இறந்து விட்டது. ஹளரத் ஜனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உடலில் ஏற்பட்ட காயம் பல ஆண்டுகள் வரை குணமாகவில்லை. அதனால் உடல் நலம் குன்றி ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் அவர்கள் மரணம் அடைந்தார்கள்.
"ஹளரத் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அனைவரிலும், எனக்கு பிரியமான பெண். என் மீது அவருக்கு இருந்த மிகுந்த பாசத்தினால் தான் கொடுமைகளுக்குள்ளானார்கள்" என்று வருத்தத்துடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஹளரத் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அடக்கம் செய்யும் நேரத்தில் கபரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கி ஜனாஸாவை அடக்கம் செய்தார்கள். கபரில் இறங்கும் நேரத்தில் மிகவும் துயரத்துடன் இருந்தார்கள். ஆனால் கபரிலிருந்து வெளியே வரும் நேரத்தில் அவர்கள் மலர்ந்த முகத்துடன் இருந்தார்கள். நபித்தோழர்கள் அதற்கான காரணத்தை வினவியபோது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஜைனப்பின் பலஹீனத்தை எண்ணி வருத்தமடைந்தேன். கபரின் இறுக்கத்தையும், கடுமையையும் விட்டு ஜைனப்பை பாதுகாக்குமாறு பிரார்த்தித்தேன். அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு விட்டான்" என்றார்கள்.
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புதல்வியும், இஸ்லாத்திற்காக பலவித கொடுமைகளையும் அனுபவித்து, தன்னுடைய இன்னுயிரையும் ஈந்துவிட்ட மாதரசிக்கே கபரின் இறுக்கத்தை விட்டும் விலக்கு அளிக்கும்படி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள் எனில், நம்மைப்போன்ற சாதாரணமானவர்களின் நிலை என்ன? கபரின் வேதனை பற்றிய அச்சம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோமே சிந்திக்க வேண்டாமா?
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூட தன்னை கபரின் வேதனையிலிருந்து காக்கும்படி அடிக்கடி துஆ செய்வார்கள் எனும்போது நாமும் அடிக்கடி கபரிலிருந்து பாதுகாபுக் கோரி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம்.
 -செங்கம் எஸ்.அன்வர் பாஷா
சகோதரர்களே, சகோதரிகளே!
இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியமிருக்கிறது...

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் குடும்பத்தார்களும் இந்த தீனுல் இஸ்லாத்திற்காக எவ்வளவு துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை என்றைக்கேனும் நாம் எண்ணிப்பார்க்கின்றோமா? பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் என்று சொல்லும்போது நம் அனைவருக்கும் அவர்களின் அன்பு மகளார் ஃபாத்திம(த்)துஜ்ஜொஹ்ரா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறார்கள். ஏனெனில் நாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களின் வரலாறுகளைப்பற்றியோ ஸஹாபாக்களின் வரலாறுகளைப் பற்றியோ தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டாதவர்களாகவே இருந்து வருகிறோம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரு ஸஹாபாக்களின் மெய் சிலிர்க்கும் வரலாறு ஒருபக்கமிருக்கட்டும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மகளார் ஹளரத் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எதிரிகளால் தாக்கப்பட்டு கீழே விழுந்ததனால் வயிற்றிலுள்ள குழந்தை இறந்துவிட்டதையும், அதன் பாதிப்பு அவர்களின் உடல்நலக்குறைவுக்கு காரணமாகி அவர்கள் மரணத்திற்கும் காரணமாகிய சம்பவம் நம்மில் எத்தனைப் பெண்களுக்குத்தெரியும்? இந்த தியாக வரலாறு இன்றைய இளம் தலைமுறையைச் சார்ந்த பெண்களுக்கு போய்ச் சேர்ந்திருக்குமானால் அவர்கள் வழிதவறிப்போவார்களா?
சகோதரர்களே, சகோதரிகளே!பெரியவர்கள் மட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறையினர் ஆண்-பெண் அனைவருக்கும் கட்டாயமாக இந்த தியாக வரலாறுகள் போய்ச்சேர வேண்டும். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இந்த வரலாறுகள் அவர்களை நேர்வழிப்படுத்தும்.
அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!