Saturday, September 7, 2013

தீனை நிலைநாட்டுவதில் ஆலிம்களின் பங்கு!

 மௌலவி நூஹ் மஹ்ளரி   
இஸ்லாமிய நெறியை நிலை நாட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைப் பற்றிக் கூறும்போது ""என்னை என் இறைவன் பிறருக்குக் கற்றுக் கொடுக்கக் கூடியவனாகவும், எளிதாக்கித் தரவுமே அனுப்பியுள்ளான்" என்று கூறுகிறார்கள். மார்க்கம் நிலை பெறுவது யாரால்...? பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் ஆலிம்களுக்கு இதில் என்ன பொறுப்புகள் உள்ளன?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ""நன்மையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய இந்த
மஸ்ஜிதுக்கு (மஸ்ஜிதுந்நபவி) யார் வருகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவரைப் போன்று இருக்கிறார்; வேறு எதற்காகவாவது எவராவது வந்தால் அவர் பிறரின் பொருள்களை வேடிக்கைப் பார்ப்பவரைப் போன்றவர்!"(ஆதாரம்: இப்னுமாஜா)
சாதாரண ஒரு முஸ்லிமே ஒன்று கற்பவனாக இருக்க வேண்டும்; அல்லது கற்பிப்பவனாக இருக்க வேண்டும் என்றால்; கற்றறிந்த ஆலிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் இதில் உள்ளது.
ஒவ்வொரு ஆலிமும் தம்மைத்தாமே கேட்க வேண்டிய கேள்வி :
1) நான் இந்த தீனுக்காகப் பாடுபட்டிருக்கிறேனா?
2) என் நண்பர்கள், என் உறவினர்கள், என்னுடன் தினமும் பழகும் மக்கள் ஆகியோருக்கு உண்மையான தீன் என்றால் என்ன என்பதை கூறியிருக்கிறேனா?
3) சிறந்த சமூகம் என்று நம்மைக் குர்ஆனில் கூறுகின்றானே அல்லாஹ். நான் அந்த சிறந்த சமூகத்தின் அறிஞனாகத் தான் இருக்கிறேனா?
மனிதப் படைப்பில் சிறந்தவர்கள் யார்? மனிதர்களிலேயே சிறந்தவர்களாக, முதன்மையானவர்களாக நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பின்னர் ஷஹீத்கள், பின்னர் இந்த தீனை நிலைநாட்டப் பாடுபடும் ஆலிம்கள்தான். அல்லாஹ்வுக்கும் ஆலிம்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் எப்போதும். ஏனெனில் நபிமார்கள் செய்த பணியை இவர்களும் செய்வதால். இன்றைய உலகின் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 150 கோடி என்று வைத்துக் கொண்டால் கற்பனை செய்து பாருங்கள். இவர்களில் எத்தனை ஆலிம்கள் இருப்பார்கள் என்று? எங்கே இந்த ஆலிம்கள்?
தொடக்கக் காலத்தில் தீன் எவ்வாறு நிலைநாட்டப்பட்டது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புப் பணியில் ஒரு முக்கிய பகுதி கற்றறிந்த அறிஞர்களைப் பல பகுதிகளுக்கும் அனுப்புவது. முஸ்அப் இப்னு உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மதீனாவுக்கு அனுப்பினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்றாண்டு காலத்தில் மதீனாவாசிகளுக்கு குர்ஆன் கற்றுக் கொடுத்து, தீனின் சட்டங்களைச் சொல்லிக் கொடுத்து  அனைவரையும் இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரவில்லையா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரத் புறப்பட்டு மதீனா வந்தடைந்தபோது ""தலஅல் பத்ரு அலைனாஸ" என்று பாடி வரவேற்கும் அளவுக்குத் தயார் படுத்தினார்களே ஓர் அறிஞரின் அயராத உழைப்பில்லையா அது?! "தவ்ஸ்' என்ற கோத்திரத்தைச் சார்ந்த "துஃபைல்' ரளியல்லாஹு அன்ஹு என்ற பெருங்கவிஞர் இஸ்லாத்தை ஏற்று, நபியிடம் தீனைப் படித்து, பின் தன் கோத்திரம் முழுவதையும் தனி மனிதராக நின்று, வென்று இஸ்லாத்தின்பால் கொண்டு வரவில்லையா? அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள்தாமே.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் முதலில் இஸ்லாத்தை ஏற்ற ஆண் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு. இவர் இஸ்லாத்தை ஏற்ற ஒரு வாரத்திற்குள் ""சுவனத்தை நற்செய்தியாகக் கூறப்பட்ட 10 பேர்களில்" 6 பேரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்து வந்து இஸ்லாத்தை ஏற்கும்படிச் செய்தார். அப்படியெனில் ஒரு வார காலமாக அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பணி என்னவாக இருந்திருக்கும்ஸ? யோசித்துப் பாருங்கள்.
எமன் நாடு எப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது? முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு. அபூ மூஸா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு போன்ற இரு பெரும் அறிஞர்களால் தானே! ""என் சமூகத்திலேயே ஹலால் ஹராமை அதிகம் அறிந்தவர் அபூ மூஸா" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பாராட்டப்பட்ட பெரும் அறிஞர் அல்லவா இவர்! எகிப்தில் எவ்வாறு தீன் நிலை நாட்டப்பட்டது? அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற பேரறிஞர் மூல மாகத்தானே...! ஈரான் ஸஅத்பின் அபீ வகாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற பெரும் ஸஹாபியால் என்று ஒரு தனி அறிஞரால் தீன் நிலைநாட்டப்பட்ட சமூகங்களைக் கூறிக்கொண்டே போகலாம். இதில் ஆலிம்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று ""பிறருக்கு ஒரு நன்மையைக் கற்றுக் கொடுத்தால் அவருக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே, கற்றுக் கொடுத்தவருக்கும் கிடைக்கும்." சற்று யோசித்துப் பார்ப்போம்.
முஸ்அப் ரளியல்லாஹு அன்ஹு என்ற தனிநபர் மதீனாவையே இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தார், அவருக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். மாஷா அல்லாஹ்! எகிப்தில் தீனை நிலை பெறச் செய்த அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நன்மைகளை கற்பனை செய்ய முடிகிறதா! ஸஅத் பின் அபீ வகாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நன்மைகள், முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரின் நன்மைகள்... மாஷா அல்லாஹ்ஸ நம் கற்பனையில் கூட கொண்டு வர முடியாது. ஆக இந்தப் பணி எவ்வளவு முக்கியமானது அதில் உலமாக்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் (தோராயமாக)
பத்ரில் எண்ணிக்கை 313
உஹதில் எண்ணிக்கை 700
அகழ் போரில் எண்ணிக்கை 1100
கைபரில் எண்ணிக்கை 1400
ஹுதைபிய்யா உடன்படிக்கை 1400
ஃபத்ஹ் மக்காவில் எண்ணிக்கை 10,000
எண்ணிக்கையில் உயர்வைப் பாருங்கள். எப்படி உயர்ந்தது? தெரிந்து கொண்டவர்கள் ""நமக்குத் தெரிந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்" என்று நினைத்து சும்மா இருந்திருந்தால் அது நடந்திருக்குமா?
ஹுனைன் போரில் 12,000
தபூக் போரில் 30,000
ஹஜ்ஜத்துல் விதாவில் 1 லட்சம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமாகும் போது ஸஹாபாக்களின் எண்ணிக்கை1,20,000 பேர்.
மதீனாவில் அடக்கம் செய்யப்பட்ட நபித்தோழர்களின் எண்ணிக்கை வெறும் 10,000 பேர் என்று வரலாற்றுக் குறிப்பில் இமாம் இப்னு கதீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள். இப்போது நாம் கேட்கும் கேள்வி... மீதி 1,10,000 பேர் எங்கே...?
உலகின் பல பாகங்களுக்கும் பிரிந்து சென்றனர் என்றால் ஏன்? வியாபார விஷயமாகவாஸ? உறவினர்களைக் காண்பதற்காகவா? அல்லது தீனை நிலை நாட்டவாஸ? யோசித்துப் பாருங்கள். இஸ்லாம் குறித்த நேசம் நான் ஒரு முஸ்லிம் என்பதற்கும், நான் இஸ்லாத்தை நேசிக்கிறேன் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஓர் அறிஞர் எப்போது இந்த தீனை நிலைநாட்டப் பாடுபடுவார் என்றால் அறிஞராக மாறும்போது மட்டுமல்ல மாறாக இந்த தீனை நேசிக்கும் போதுதான்.
நம் கண்முன்னே நம் செல்ல மகன் மரணத் தருவாயில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தால் அல்லது விபத்தில் காயமுற்றால்; (அல்லாஹ் பாதுகாக்கட்டும்) ஒரு தந்தையாக நம் மனநிலை எப்படி இருக்கும்? எதையாவது செய்து எப்படியாவது நம் பிள்ளையைக் காப்பாற்றத் துடிக்க மாட்டோமா? இதே எண்ணம் இஸ்லாத்தின் மீதும் வரவேண்டாமா? தீன் என்ன மரணப்படுக்கையிலா கிடக்கிறது என்று கேட்க வேண்டாம். ஆனால் இந்த தீன் ஒரு way of lifeஎன்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதை எத்தனை பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் இந்த இஸ்லாம் வழி காட்டும் என்று ஜும்ஆ மேடைகளில் முழங்கும் ஆலிம்கள் அதை நிலைநாட்ட எந்த அளவு பாடுபடுகின்றனர் என்பதையும் யோசிக்க வேண்டும்.
இந்த மண்ணில் தீனை நிலைநாட்ட அல்லாஹ் தேர்ந்தெடுத்தது ஒரே ஒரு மனிதரைத்தானே, அவர் தாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி பின் லட்சமாகி பின்னர் மதீனா முழுவதும் முஸ்லிம்களாக மாறியபோது அல்ஹம்துலில்லாஹ்" போதும் என்று நபியோ, அன்றைய கற்றறிந்த அறிஞர்களோ நினைத்திருந்தால், இதை எழுதும் நானும் வாசிக்கும் நீங்களும் முஸ்லிம்களாக இருந்திருப்போமாஸ? அவர்கள் விதைத்தார்கள், நாம் அறுவடை செய்கிறோம், நாம் விதைத்தால் தானே நமக்குப் பின் வரும் நம் சமூகம் அறுவடை செய்ய முடியும்? இல்லையேல் வேறு யாரோ அறுவடை செய்து விட்டுப் போய் விடுவார்கள். (அதுதான் இன்று நடக்கிறது)
நான், என் குடும்பம், என்னைச் சார்ந்தவர்கள் மட்டும் நன்மக்களாக இருந்தால் போதும் என்று ஒரு சாதாரண முஸ்லிம் வேண்டுமென்றால் நினைக்கலாம் ஆனால் ஒரு அறிஞன் நினைத்தால், கற்றறிந்த கல்வியால் என்ன பயன்? நாளை இதைக் குறித்து அல்லாஹ் கேட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும். இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி குர்ஆன் படைக்கப்பட்டதுதான் என்ற தேவையற்ற பிரச்னை தலைதூக்கிய போது இந்தத் தனித்துவ மிக்க பேரறிஞரின் உறுதியும், நிலைப்பாடும் ஒவ்வொரு ஆலிமுக்கும் ஒரு பாடம். யானை மீது அடித்திருந்தால் கூட யானை சிதறிப் போகுமளவுக்கு அடிக்கப்பட்ட சாட்டை அடிகள்... வயதான காலத்தில் அனைத்தையும் தாங்கினாரே ஏன்? நான் ஒரு சாதாரண முஸ்லிமல்ல. ஓர் அறிஞன்! ஆலிம்! என் கடமை இது என்பதால்தானே...!
அன்று இமாம் அஹ்மத் பின் ஹம்பலின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது. என்ன சொல்லப் போகிறார் என்று அறிய! அன்று ""ஆம் இந்தக் குர்ஆன் படைக்கப்பட்டதே!" என்று கூறியிருந்தால் இந்த குர்ஆன் இன்று எந்த நிலையில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்யவே முடியாது. ஓர் அறிஞனின் தியாகம் இஸ்லாமிய உலகில் தீனை சரியாகப் புரிந்துகொள்ள வழிகாட்டியது. அதனால்தான் எத்தனையோ துன் பங்களை அனுபவித்தபோதும், இமாமின் புகழ்பெற்ற வார்த்தைகள் எப்படி இருந்தன தெரியுமா? "உஸில்லத்துல் ஆலிம், உஸில்லத்துல் ஆலம்" "அறிஞனின் தவறு அது அகிலத்தின் தவறு" என்று. என் நாவிலிருந்து ஒரு நாளும் அசத்தியத்தின் வார்த்தைகள் வெளி வராது என்றார்கள்.
வரலாற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் இரு பெரும் மேதைகள் மட்டும் இருந்திருக்காவிட்டால் இந்த தீன் முழுமை பெற்றிருக்காது என்று கூறுவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெற்றியின் பின்னணியே தம்மைப் பின்பற்றிய ஒவ்வொரு தோழரையும் ஒரு நடமாடும் குர்ஆனாக மாற்றியது. அதிலும் குறிப்பாக திறமைசாலிகளான அறிஞர்களை இனம் கண்டு பாராட்டி தீனின் சேவைக்குப் பயன்படுத்தியமையே. யாரிடம் என்ன திறமை உள்ளது? எதில் எதில் யார் யார் அறிஞர்கள் என்று கண்டு அவர்களைப் பயன்படுத்தியது வெற்றிக்கு முக்கிய காரணம்.
நட்புக்கும், அடுத்து வரும் கிலாஃபத்திற்கும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் தலைமைக்கு உபை இப்னு கஃப் ரளியல்லாஹு அன்ஹு. கவிதைக்கு ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு போருக்கு காலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமிய சட்ட விளக்கத்திற்கு ஸைத் பின் தாபித் ரளியல்லாஹு அன்ஹு நீதிபதியாக அலி ரளியல்லாஹு அன்ஹு ஹராம் ஹலாலை விளக்க முஆத்பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு இறைப்பாதையில் செலவு செய்ய உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு பாங்கு சொல்ல பிலால் ரளியல்லாஹு அன்ஹு தம் தனிப்பட்ட உதவியாளராக ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு எனத் திறமையாளர்களை இனம் கண்டு இந்த தீனின் விஷயத்தில் பயன்படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருபத்து மூன்றாண்டு காலத்தில் பெரும் வெற்றி பெற முக்கிய காரணங்கள்.
கோடான கோடி முஸ்லிம்களில் நம்மை மட்டும் ஏன் அல்லாஹ் ஆலிமாக்கினான்? நம் பணி என்ன? பத்தோடு பதினொன்று, அத்தோடு நானும் ஒன்றுதானா? அல்லது என்னிடமிருந்து இறைவன் எதையாவது எதிர்பார்க்கின்றானா...? என்று யோசிக்க வேண்டும். ஸஹாபாக்களின் பயம் கற்றதைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்காமல் இருப்பது பெரும் தவறு என்று அன்றைய ஸஹாபாக்கள் நினைத்திருந்தனர். எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்த பலவிதமான ஹதீஸ்களை நாம் காண்கிறோம். மறைத்தல் என்பது பெரும்பாவமே அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: "நான் அதிக ஹதீஸ்களைக் கூறுவதாக மக்கள் சொல்லுகின்றார்கள். குர்ஆனின் இரண்டு ஆயத்துகள் மட்டும் இருந்திருக்காவிட்டால், நான் இவ்வளவு ஹதீஸ்களை அறிவித்திருக்க மாட்டேன்" என்று கூறி அல்பகறாவில் 159, 160ஆம் வசனங்களைக் கூறினார்.
நாம் கற்றதைப் பிறருக்குக் கொடுக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளைப் பாருங்கள். எனவேதான் நபியிடமிருந்து கேட்ட சில விஷயங்களை மக்களிட ம் கூறினால் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று பயந்து கூறாமல் விட்ட எத்தனையோ ஸஹாபாக்கள் மரணத் தருவாயில் அவற்றைக் கூறியுள்ளனர். அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு, முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரின் இறுதி கால வாழ்வைப் படித்தால் தெரியலாம். தன்னிடம் பிறர் தீனைக் குறித்து கேட்காவிட்டால் அதற்காக அழுத ஸஹாபாக்கள், ஓர் ஊரில் தீனைக் குறித்த விஷயங்களை எவரும் கேட்காவிட்டால் அந்த ஊரைவிட்டே சென்ற ஸஹாபாக்கள் என்று வரலாற்றில் நிறைய பார்க்கலாம்.
எல்லாம் எதைக் குறிக்கிறது? தான் கற்றதைப் பிறருக்குத் தெரிவிக்காமல் இருப்பது பாவம் என்று அவர்கள் எண்ணியதைத்தானே! இதுதான் ஒவ்வொரு ஆலிமுக்கும் பாடம்...! நான் வாழும் மண்ணில் இறைவனின் தீனை நிலை நாட்ட நான் என்ன செய்துள்ளேன்ஸ? என் பங்கு என்ன என்று ஒவ்வொரு ஆலிமும் கேட்கத் துவங்கினாலே போதும்ஸ.பாதி கடமை நிறைவேறும்!
source: http://www.readislam.net/portal/archives/5692

Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!