நூல்: புஹாரி 1, முஸ்லிம் 4692, திர்மிதி 1698
உமர் இப்னு ஹத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள்:
    'செயல்கள் அனைத்தும்  எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான்  கிடைக்கின்றது. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால்  அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஆகும். ஒருவரது ஹிஜ்ரத் உலகத்தைக்  குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை  மணம் செய்வார். எனவே இவர்களது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து  விடுகின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
விளக்கம்:
நம்முடைய எந்தச் செயலாக இருந்தாலும் எண்ணம் தான் அதன்  அடிப்படை, அந்த எண்ணம் சரியாக அமைய வில்லையானால் நமது செயலுக்கேற்ற கூலியை பெற  முடியாதவர்களாக ஆகிவிடுவோம். மறுமையில் கூலி கிடைக்கும் என்று எண்ணிச் செய்யும்  செயலுக்கு கூலி கிடைக்காமல் போனால், அதை விட பெரிய நஷ்டம் வேறு எதுவாக இருக்க  முடியும்?
இந்த ஹதீஸ் நம்முடைய செயல்களுக்குறிய எண்ணம் எவ்வாறு  அமைய வேண்டும், எவ்வாறு அமைந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்க்கு தெளிவான  விளக்கத்தை கொடுக்கிறது.
ஒரு செயல் இறைவனால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால்  மூன்று விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 அல்லாஹ்வின் கட்டளை அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும்.
இஃக்லாஸ் எனும் தூய எண்ணம் இருக்க வேண்டும்.
மூன்றாவதான விதியைத் தான் இந்த ஹதீஸ் நமக்குச்  சொல்கிறது.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் செய்யாத  எந்தச் செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கான சான்றுகளை ஏராளமாக  ஹதீஸ்களில் காண்கிறோம். உதாரணமாக,
சுலைமான் பின் யஸார் என்பவர் வழியாக  அறிவிக்கப்படுகிறது. மக்கள் அபூஹுரைராவைச் சுற்றி இருக்கும் போது நாதில் என்ற  சிரியாவைச் சேர்ந்தவர் சொன்னார், 'பெரியவரே! நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள்  கேட்டவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்'. ஆம்! நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக்  கேட்டேன். மறுமை நாளில் ஷஹீது (உயிர்த்தியாகி) உடைய விஷயம் தான் முதலில் எடுத்துக்  கொள்ளப்படும். அவர் கொண்டு வரப்படுவார். அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை அல்லாஹ்  நினைவூட்டுவான். அவரும் அதை ஒத்துக் கொள்வார். அந்த அருட்கொடைகளைக் கொண்டு நீ என்ன  செய்தாய்? என்று அல்லாஹ் கேட்பான். நான் ஷஹீதாக மரணிக்கும் வரை போர் புரிந்தேன்  என்று அவர் சொல்லுவார். நீ பொய் சொல்லி விட்டாய் என்று அல்லாஹ் சொல்வான். நீ போர்  புரிந்தாய் எனக்காக அல்ல, மக்கள் உம்மை 'போர் வீரன்' என்று புகழ வேண்டும்  என்பதற்காக போர்புரிந்தாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ்  சொல்லுவான். அவருக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்படும், அவர் முகம் குப்புற  இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் எறியப்படுவார்.
அடுத்து ஒரு அறிஞர் கொண்டு வரப்படுவார். அல்லாஹ்  அவருக்கு அருளிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அந்த அருட்கொடைகளைக் கொண்டு நீ என்ன  செய்தாய்? என்று அல்லாஹ் கேட்பான். நான் கல்வியைக் கற்று அதை பிறருக்கு கற்றுக்  கொடுத்தேன், குர்ஆனை ஒதுவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்தேன். நீ பொய் சொல்லி விட்டாய்  என்று அல்லாஹ் சொல்வான். மக்கள் உம்மை 'அறிஞன்' என்று புகழ வேண்டும் என்பதற்காக  கல்வி கற்றாய், 'காரி' என்று மக்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆனை ஓதினாய்,  அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்லுவான். அவருக்கு எதிராக கட்டளை  பிறப்பிக்கப்படும், அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில்  எறியப்படுவார்.
அடுத்து ஒரு செல்வந்தர் கொண்டு வரப்படுவார். அல்லாஹ்  அவருக்கு அருளிய அருட்கொடைகளை நினைவூட்டுவான். அந்த அருட்கொடைகளைக் கொண்டு நீ என்ன  செய்தாய்? என்று அல்லாஹ் கேட்பான். நீ விரும்பிய விதத்தில் நான் எனது செல்வத்தை  செலவு செய்தேன் என்று அவர் சொல்வார். நீ பொய் சொல்லி விட்டாய் என்று அல்லாஹ்  சொல்வான். மக்கள் உம்மை 'தயாளன்' என்று புகழ வேண்டும் என்பதற்காக செலவு செய்தாய்,  அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்லுவான். அவருக்கு எதிராக கட்டளை  பிறப்பிக்கப்படும், அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில்  எறியப்படுவார்.
(நூல்: முஸ்லிம் 4688)
(நூல்: முஸ்லிம் 4688)
எந்தச் செயலும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு  தூய எண்ணம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
தூய எண்ணம் தான் அமல்களின் அடிப்படை என்பதற்கு வேறொரு  ஹதீஸைப் பார்ப்போம்.
நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தோற்றத்தையோ செயல்களையோ  பார்ப்பதில்லை, அவன் உங்களுடைய உள்ளத்தையே பார்க்கிறான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா  (ரலி), நூல் : முஸ்லிம்)




