Monday, November 22, 2010

இஸ்லாமிய பார்வையில் கிண்டலும் கேலியும்

தொகுப்பு  : முஹம்மது ஆரிப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுல்லாஹி வ பரகதுஹூ 
பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மான் னிர்ரஹீம்
  • பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
  • பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது
  • போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
  • ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
  • ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
  • இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மட்டுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

பொய் பேசுவதன் தீமைகள்: -

1)
பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான் :
16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

3)
பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி

4)
பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்; (அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)

5)
பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

6)
விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -

முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.

எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.

கட்டுரைக்கு உதவிய தளம்  சுவனத்தென்றல்
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!