Tuesday, June 27, 2023

வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர்களே, உங்களைத்தான்!

 بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
எவர் சிறப்புமிக்க கஃபதுல்லாஹ் வரை செ(ன்று தன் இ)ல்ல(த்திற்குத் திரும்பிவர) வாகனமும் உணவும் பெற்றிருக்கின்றாரோ அவர் ஹஜ்ஜுச் செய்யவில்லையானால் அவர் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, இறந்து விடுவதில் அல்லாஹ்வுக்கு அவரைப் பற்றி எவ்வித அக்கரையும் இல்லை.  அன்றி (நான் கூறும்) இது ''... .. .. எவர்கள் அங்கு பிரயாணம் செய்ய ஆற்றலுடையவர்களாக
இருக்கின்றார்களோ, அவர்கள் மீது அல்லாஹ்வுக்காக, (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும். 3:97 என்ற இறைவசனத்திற்கு ஏற்பவேயாம்'' - என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அலி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதீ)
உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாம் கைப்பற்றியுள்ள) இந்நகரங்களில் சில ஆட்களை அனுப்பி, ஹஜ் செய்யும் சக்தியிருந்தும் ஹஜ் செய்யாமலிருப்பவர்கள் யார்? யார்? என்று ஆய்வு செய்து அவர்கள் மீது ஜிஸ்யா (முஸ்லிமல்லாத குடிமக்களிடம் வசூலிக்கப்படும்) வரிவிதித்திட நான் நாடியுள்ளேன். இவர்கள் முஸ்லிம்களல்லர்! இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால், எப்போதோ ஹஜ் செய்திருப்பார்களே! முஸ்லிம் என்பதன் பொருள் தன்னைத்தானே அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுபவன். ஒருவர் உண்மையிலேயே தம்மை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டிருந்தால், எவ்விதக் காரணமுமின்றி ஹஜ் போன்ற மகத்தான வணக்கத்தைக் குறித்து அவர் அலட்சியமாக இருந்திருக்க முடியுமா? (அறிவிப்பாளர் : ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முன்தகா)  
''எவர் ஹஜ்ஜுச் செய்ய நாடுகின்றாரோ அவர் (இறந்து விடவோ அல்லது ஏழையாகி விடுவதற்கு முன்னதாகவோ) அவசரமாகச் செய்து விடவும்...'' என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இஹ்ராம் ஆடைகள்
இஹ்ராம் அணிபவருக்கு என்னென்ன ஆடைகள் அணிவது ஆகும்! என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டதற்கு அவர்கள் சட்டை, தலைப்பாகை, மேல்அங்கி, கால்சட்டை, வர்ளி எனும் மணமுள்ள புல் அல்லது குங்குமத்தால் சாயம் காய்ச்சப் பெற்ற ஆடைகள் முதலானவற்றை இஹ்ராம் அணிபவர் அணியக் கூடாது. அன்றி கால் உரையில் (வாய்ப்பகுதியை) வெட்டி விட்டு அடிப்பாகத்தை கணுக்காலுக்குக் கீழே அணியலாம் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரீ.)
ஹஜருல் அஸ்வத்
நிச்சயமாக நீ ஒரு கல் தான். நன்மை செய்யவோ அல்லது தீமைபயக்கவோ உன்னால் இயலாது என்பதை நிச்சயமாக நான் அறிவேன். மேலும் நிச்சயமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உன்னை முத்தமிடுவதை நான் ஒருவேளை பார்த்திரா விட்டால் உன்னை நான், ஒரு போதும் முத்தமிடப் போவதில்லை என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிக் கொண்டு ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டதை நான் பார்த்தேன்.  (அறிவிப்பவர் : ஹாபீஸ் இப்னு ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரீ, முஸ்லிம். )
கஃபா
கஃபாவை வலம் வருவது தொழுகை போன்றதாகும். ஆனால் (தொழுகைக்கும் அதற்கும் உள்ள வேற்றுமை) நீங்கள் அதில் உரையாடுவதேயாகும். எவர் அதில் உரையாடுகிறாரோ அவர் நன்மொழிகளையே கூறட்டும், என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதீ, நஸயீ.)
ஹஜ்ஜின் மாண்புகள்
நாயகமே! செயல்களில் (எல்லாம்) இறைவழியில் போர்புரிவதைத்தான் நாங்கள் மேலானதாகக் கருதுகிறோம். (ஆகவே பெண்களாகிய) நாங்கள் போர் புரிய வேண்டாமா? என்று நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வினவினேன். (அதற்கு) அவர்கள் எனினும் போர்புரிவதை விட மிக மேலானது மாண்புமிக்கது (ஏதும்) பாவங்கள் செய்யப்படாத ஹஜ்ஜேயாகும். பின்னர், இல்லத்தில் இருந்து வருவதைக் கடமையாக்கிக் கொள்வதாகும் என்று கூறினார்கள். இதனை நான் செவியுற்றது முதல் ஹஜ்ஜுச் செய்வதை நான் எப்பொழுதுமே கைவிட்டதில்லை. (அறிவிப்பாளர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : புகாரீ, நஸயீ.)
குர்பானி
ஹஜ்ஜுப் பெருநாளன்று மனிதன் செய்யும் செயல்களில் குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்விற்கு உகந்ததாக (வேறு எதுவும்) இல்லை. அன்றி (குர்பானி கொடுக்கப்பட்ட) அந்த பிராணி மறுமை நாளின் போது தன் கொம்புகள், உரோமம், கால் குளம்புகள் ஆகியவற்றுடன் (உடல் பெற்று) வரும். மேலும், நிச்சயமாக அதன் ரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னதாகவே இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகின்றது. எனவே நீங்கள் இந்த நன்மாராயத்தைக் கொண்டு மகிழ்ச்சியுறுங்கள்க என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : திர்மிதீ)
Thanks. : http://www.nidur.info
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!